Monday, March 13, 2023

வாழ்வியலின் எழில்

 சொல்ல மறந்த/மறைத்த 

கதைகளும், எண்ணங்களும், வார்த்தைகளும் 

சொல்லப்பட்டிருந்தால் 

அதன் விளைவுகள் ....

என்னென்னவோ !!!

அதை அந்த 

கதைகளும் , எண்ணங்களும், வார்த்தைகளும் கூட 

அறிந்திராது  என்பதே 

வாழ்வியலின் எழில் 

மகள்

 மகள்களை  பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்....

       அழகி என்பதன் உண்மையான அர்த்தம்....

       தந்தையென்பதின் நிஜமான கர்வம்....

       பேரன்பின் முழு பரிமாணம்...

       "இறைவனின் பரிசு" வார்த்தைகளின் உருவக உண்மை....

       மகிழ்ச்சிக்கு காரணம் எதுவும் தேவை இல்லையென்ற எதார்த்தம் ....

       உறவுகளில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை... அனைத்து விடைகளுக்கும் கேள்வி....

Saturday, May 2, 2020

என்னையும் எனது இரண்டாவது மகளையும் நோயின்றி பாதித்த கொரோனா


என்னை அறிந்தவர்கள், என்னை அறிந்தவரையில் அறிந்தது, எனது முதல் மகள் மற்றும் இரண்டாவது மகன் பற்றித்தான். அவர்கள் எனது இரண்டாவது மகளை அறிந்திருந்தாலும், அவளை எனது இரண்டாவது மகளாக அறிந்திருக்க மாட்டார்கள். அவளை இரண்டாயிரத்து ஏழாமாண்டின் இறுதியில் வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்தே, எங்களுள், குறிப்பாக, எனக்கும் அவளுக்கும் நெருக்கம் அதிகம். அவளும் நானும் மட்டும் அளவளாவிய, உரையாடிய மணித்துளிகள் மிகுதியானவை. அத்தருணங்கள் அனைத்தும் வார்த்தைகள் எங்களை தனியே விட்டு வெகு தூரம் போன நினைவுத்திவலைகள. பல நேரங்களில் பாடல்களாக, அவள் பாட நான் கேட்க, சில நேரங்களில் சுருதி சேர்ந்தும் சேராமலும் நானும் அவளும். பல நேரங்களில் இளையாராஜாவும், சில சமயம் ரகுமானும் மற்றும் பலரும் எங்களோடு இசை வடிவில். குடும்பமனைவரும் அவளுடன் சேர்ந்திருந்த நாட்களில், முதலில் மகளின் பரிபூர்ண அனுபவிப்புக்குள்ளானவள், எனது மகன் சேர்ந்தபின் இருவருக்கும் சமமாக, அன்பாக தன்னை பகிர்ந்து அளிந்துக்கொண்டாள்.
அவளெங்களுடன் சேர்ந்த முதல் வருடத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை அவளை காப்பகத்தில் கொண்டு விடும் தருணம் எனது எடை கூடும், மனக்கனத்தினால். அவ்வகத்தில் அவளை விடுத்து அதன் வாசல் வரும் வரை நடக்கும் தருணங்கள் முழுவதும், முகம் திருப்பி அவளை ஏக்கத்துடன் பார்த்த தருணங்களாக நிரம்பியிருக்கும். காப்பகத்திலிருந்து அவளை அழைத்து செல்ல சொல்லும் அலைபேசி அழைப்பு சுக கீதமாக மனதை நனைக்கும்.
ஆயிரத்தி அறுநூற்றி ஐம்பத்தி எட்டிலிருந்து எழுநூற்றி பதினெட்டாக உருமாறிய பிறகு எங்களது நெருக்கம் பன்மடங்கானது.
இத்துணை நெருக்குத்துடன் இருந்த நாட்கள் கனவாக, வெறும் கனவாக கடந்த இரண்டு மாதங்கள். இன்று அவளுடன் அளவளாவிய நிமிடங்கள் குறைவானதென்றாலும் நிறைவாக மனச்சுமைகள் இறக்கிய தருணங்களாக. கொரோனாவின் மற்றொரு பாதிப்பு, எனக்கும் எனது இரண்டாவது மகள், "மஹிந்திரா எக்ஸ்.யூ. வி 500"க்கும் இடையே ஏற்படுத்திய தற்காலிக பிரிவு.

Tuesday, July 23, 2019

நிலா !!!!

உன்னில்  பல பாட்டிகள் வடை சுட்டுட்கொண்டிருக்கிறார்களா ?
உன்னுள்  முயல் கொண்டுள்ளாயா ?
பதினைந்து நாட்கள் தேய்மானம் அறிவாயா ?
நாங்கள் உன்னிடமும் களங்கம் கண்டோம் - தெரியுமா ?
வைரமுத்து முதல் மரியாதையாகக் கையில் பிடித்து உன்னைத்தானா ?
இவ்வாறு எங்களுள் எண்ணிலடங்கா கேள்விகள்
இதோ விடைகாணும் நேரம்
கனவு(கள்) மெய்ப்படும் நேரம் !!!
இனி நிலாச்சோறும் தேன் நிலவும் நிலவிலேயே
பிறை சூடிய சிவன்
வாழ்க நீ எம்மான்  

Saturday, July 15, 2017

பிடிப்பு

எனக்கு என்னையே பிடிக்காத அளவுக்கு
மற்றவர்களைப் பிடித்துப் பிடித்துக்கொள்ள
முயற்சி செய்கிறேன்.

கவிதை

கவிதை எழுதச் சொன்னாள்
எழுதினான்
கொடுத்தான்
படித்தாள்
சிவந்தாள்
அக்கவிதை
--- நீ ---

அணை

அடுத்தடுத்து அணை
எண்ணைக்கொட்டி விளக்கை
உன்னைக்கொட்டி என்னை
அணை உடை
வரப்பு நிறை
வரம்பு மீறு

விளைச்சல் பெருக்கு !!!!